370 வது பிரிவு கூறுவது என்ன?
370. (1) இந்த அரசியல் சாசனத்தில் யாது கூறப்பட்டிருப்பினும்
(அ) 238 ஆவது கோட்பாட்டில் உள்ளவற்றை ஜம்மு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்
(ஆ) அந்த மாநிலம் சம்பந்தமாக சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்
(1) அந்த மாநிலத்தைக் குடியேற்ற நாடான இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்ட ஆவணத்தில் அந்த மாநிலம் பற்றிக் குடியேற்ற நாடான இந்தியாவுக்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட விவகாரங்களுக்கும் அதோடு ஒத்திருக்கும் விவகாரங்களுக்கும் மத்தியப் பட்டியலிலும் மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் இருக்கின்றவை எனக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசைக் கலந்தாலோசித்த பின்னரும்
(2) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் தம் உத்தரவில் குறிப்பிடத்தக்க அத்தகைய பட்டியல்களில் உள்ள வேறு விவகாரங்கள் பற்றியும் மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
விளக்கம் : இந்தக் கோட்பாட்டில் வரும் மாநில அரசாங்கம் என்ற சொல் குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக ஜம்மு காஷ்மிரின் மகாராஜா என்று அங்கீகரித்துள்ள நபரைக் குறிக்கும். அந்த மகாராஜா 1948 மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள பிரகடனப்படியுள்ள தம் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.
(இ) இந்தக் கோட்பாடும் மற்றும் ஒன்றாவது கோட்பாடும் அந்த மாநிலத்துக்கு அனுசரிக்கப்பட வேண்டும்.
(ஈ) குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடும் விதிவிலக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு இந்த அரசியல் சாசனத்தில் உள்ள மற்ற விதிகளும் அனுசரிக்கப்படலாம்.
ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது,
இதற்கு முந்தைய விதியில் கூறப்படாத விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.
(2) (1) வது கூறின் (ஆ) கிளைக் கூறின் (2)வது பத்தியில் உள்ளபடி அல்லது அந்தக் கூறின் (ஈ) இணைக் கூறின் இரண்டாவது விதியில் உள்ளபடி மாநில அரசாங்கத்தின் சம்மதத்தை அந்த மாநிலத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னர் பெற்றிருந்தால் அதனை அரசியல் நிர்ணய சபையில் அத்தகைய முடிவு எடுக்கப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(3) இந்தக் கோட்பாட்டில் இதற்கு முன்னர் யாது கூறப்பட்டிருப்பினும் தாம் குறிப்பிடும் அத்தகைய நாளிலிருந்து இந்தக் கோட்பாட்டில் உள்ளவை செயல் இழக்கும் அல்லது அத்தகைய மாற்றங்களுக்கும், விதி விலக்குகளுக்கும் உட்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு தரலாம்.
எனினும் அத்தகைய அறிவிப்பை செய்வதற்கு முன் (2) வது கூறிலுள்ளபடி அந்த மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையால் அந்த அறிவிப்பு பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இப்படி இந்திய அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமையும், சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவை மட்டும் இந்திய அரசிடம் இருக்கும். மற்ற எல்லா அதிகாரமும் மாநில அரசிடம் இருக்கும்.
காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஜம்மு காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார்.
ஆளுநர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.
இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல; பிரதமராக) 1951 ல் ஷேக் அப்துல்லா பதவியேற்றார். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் ஜனாதிபதியானார்.
இதன் பின்னர் 370 வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச்சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது.
பின்னர் 1957 ஜனவரி 26 ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது.
ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும், முஸ்லிம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது.
பிரதமர் முதல்வராக ஆக்கப்பட்டார். ஜனாதிபதி கவர்னர் ஆனார். இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது.
ஆனாலும் மீதமுள்ள மாற்றப்படாத மீறப்படாத ஒப்பந்த விதியின்படி காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை.