முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். தேவாலயங்கள் மூடப்படுகின்றன. பெளத்த மடாலயங்கள் கண்காணிக்கப்படுகின்றன. பெளத்த துறவிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஹலால் உணவகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. ஷாவ்லின் கோவிலில் சீனக் கொடி வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டுள்ளது.
சீனா மறைமுகமாக மத நம்பிக்கைகளின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து வருகிறது. சீனாவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நாத்திக அமைப்பாகத் தன்னை அறிவித்துக் கொண்டுள்ளன. ஆனால் சீன அரசியலமைப்பு, குடிமக்களின் மதநம்பிக்கைகளுக்கு முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
இந்நிலையில் சீனா கடந்த ஓராண்டாக முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என மத நம்பிக்கையுள்ள யாரையும் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்கி வருகிறது.
இதுவரை பூர்வகுடி முஸ்லிம்களான உய்குர் முஸ்லிம்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களைச் சித்திரவதை முகாம்களில் சிறை வைத்துள்ளது. இந்த சித்ரவதை முகாம்களில் தங்கள் மதநம்பிக்கையை கைவிடும்படியும் கம்யூனிசக் கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும்படி வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சீன அரசு இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. ‘இது தீவிரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை’ எனத் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த ஒடுக்குமுறை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அந்நாட்டின் 1951ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி புத்தமதம், தாவோ , இஸ்லாம், கிறிஸ்துவ மதப்பிரிவான புராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மதக்குழுக்களின் கூட்டங்கள், வெளியீடுகள் நிதி நிலைகள் என எல்லா நடவடிக்கைகளையும் அரசு கண்காணிக்கும். அரசியலமைப்பு சட்டத்தின்படி கிட்டத்தட்ட முழு மத சுதந்திரம் இருக்கும்போதும் சீனா தன் அடக்குமுறையை ஏவிவருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதலே மதக் கோட்பாடுகளில் சீன பொதுவுடைமைச் சித்தாந்தங்களைத் திணிக்க முற்பட்டு வருகிறது. சீன அதிபராக ஜி ஜின்பிங் பொறுப்பேற்ற பிறகு நிலைமை மோசமாகியுள்ளது.
எல்லா மதத்தினர் மீதும் அடுக்கு முறைகள் ஏவப்பட்டாலும் முஸ்லிம்கள் மீதுதான் அதிக அளவில் அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.
கடந்த வாரம் பீஜிங்கில் உள்ள 11 ஹலால் உணவகங்களின் பதாகைகளிலிருந்து அரபிக் வார்த்தைகளை நீக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நிய கலாச்சாரமாக இருப்பதால் அரபி வார்த்தைகளை நீக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவர்களின் பைபிள்கள் எரிக்கப்படுவதாகவும், தேவாலயங்கள் மூடப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவாலயங்களின் கதவுகளில் வைக்கப்பட்டிருக்கும், கேமராக்கள் மூலம் தேவாலயங்களில் நுழைபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
இது மட்டுமின்றி மத வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் செய்திகள், தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த கட்டுப்பாடுகளுக்கு பௌத்தம், தவோ மதங்களும் தப்பவில்லை. கிழக்கு சீனாவிலும், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்திலும் சீனா ஒடுக்குமுறைகளை ஏவியபோதுதான் தலாய் லாமா நாட்டிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மடாலயங்கள் எல்லாவற்றிலும் தினமும் துறவிகளையும், புத்தபிகுகளையும் சீனா கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. இதுமட்டுமின்றி இந்த மடாலயங்களில் வசிப்பவர்களின் தொலை தூரப் பயணங்களைத் தடுத்து நிறுத்தியும், சில புத்தத் துறவிகளைக் கைது செய்தும் தனது அத்துமீறலைத் தொடர்ந்தபடி இருக்கிறது சீனா.
சீனாவின் மிகப் பிரபலமான கோவில், ஷாவ்லின். தற்காப்புக் கலையான குங்ஃபூ பிறந்த இடம் எனக் கருதப்படும் இந்த கோவிலில் சீனாவின் தேசியக் கொடி பலவந்தமாக ஏற்றப்பட்டது.
இது குறித்து சீன அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிபர் ஜி ஜின்பிங்கின் ‘ அகண்ற சீனா’ கனவுத் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த நடவடிக்கை என்றும், இது சீனாவை மீண்டும் வலிமையாக்கும் முயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிசேக் நாகன்.