இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் 33 வது பிரிவின் மூலம் எனக்கு அளிக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் –
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கு ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்துள்ளேன்.
இலங்கை ஒரு சிறப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்ட நாடு. ஒரு நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவமிக்க மரபுரிமைகள் அந்நாட்டின் தனித்துவத்தையும் வரலாற்றையும் எடுத்துக்காட்டும் மூலாதாரமாகும்.
இந்த மரபுரிமைகள் இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளினால் அழிவுக்கு உட்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இந்த மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்குச் சொந்தமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல்;
அவ்வாறு அடையாளம் கண்ட இடங்கள் மற்றும் தொல்பொருள்களைப் பாதுகாத்தல்;
புனரமைத்தல்;
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்குப் பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை இனம்கண்டு நடைமுறைப்படுத்தல்;
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவை இனம்காணுதல்;
மேலும், தெளிவாகவும் நிரந்தரமாகவும் நிலப் பிரதேசத்தை ஒதுக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்;
குறித்த காணிகளின் கலாசார முக்கியத்துவத்தை பாதுகாத்து இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பிரபல்யப்படுத்தல்;
மற்றும் மேற்படி மரபிடங்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகியன மேற்படி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும்.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும்;
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்;
தொல்பொருளியல் சக்கரவர்த்தி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த நாயக தேரர்;
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் தமன்கடுவை தலைமை சங்கநாயக்க தேரரும் அரிசிமலை ஆரண்ய சேனாசனாதிபதி சங்கைக்குரிய பனாமுரே திலகவங்ஸ நாயக தேரர்;
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திஸாநாயக;
காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத்;
நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ. பெரேரா;
களணி பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ;
பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கபில குணவர்தன;
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்;
கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ திஸாநாயக;
தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர –
ஆகியோர் செயலணியின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.