இஸ்லாத்தின் வரலாறு அரபுத் தீபகற்பத்தில் மக்காவிலுள்ள ஹிரா என்னும் குகையில் எதிரொலித்த இக்ரஃ (வாசிப்பீராக)என்ற வார்த்தையோடு ஆரம்பித்தது. நபிகளாருக்கு அருளப்பட்ட அந்த ஆரம்பத் திருவசனங்கள் “கலம்” என்னும் எழுதுகோல் பற்றிப் பேசியது. மனித இனத்திற்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ்வினால் அருளப்பட்ட அல்குர்ஆன் “கிதாப்” (நூல்) என அழைக்கப்பட்டது. “வாசிப்பு”,”எழுதுகோல்” “நூல்”ஆகிய மூன்று பதங்களும் அறிவோடு தொடர்புடையவை. குர்ஆனின் இந்தத் தூண்டுதலின் அடிப்படையிலேயே இஸ்லாம் ஒரு மாபெரும் அறிவியக்கத்தை ஆரம்பித்து வைத்தது. அந்த அறிவியக்கத்தில் எழுதுகோல் மிகப் பெரும் சக்தியாக விளங்கியது. எழுதுகோலைப் பயன்படுத்தி அறிவு பெற்ற, அறிவைப் பரப்பிய ஆயிரக்கணக்கான அறிஞர்கள் தோன்றினர். இலட்சக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டன.அந்த நூல்களுக்கான புத்தகக் கடைகள் பக்தாத்,கொர்டோவா , இஸ்பஹான்,ஸமர்க்கந்த் போன்ற இஸ்லாமிய நகரங்களில் தோன்றின . நூல்களை வாங்கி வாசிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் காணப்பட்டார்கள் . ஆட்சியாளர்களும் தனி மனிதர்களும் நூல் நிலையங்களை அமைத்தார்கள். “எழுதுகோலையும்” “நூல்களையும்” “அறிவையும்” மையமாகக் கொண்டு உலகம் வியக்குமளவிற்கான உன்னதமான நாகரிகம் ஒன்று கட்டியெழுப்பப்பட்டது.
இந்த நாகரிகத்தின் பெருமை பற்றிப் பேசுவது இங்கு நோக்கமன்று. இந்த நாகரிகத்தின் வாரிசுகளான இன்றைய முஸ்லிம்களின் நிலை பற்றிச் சிந்திக்கத் தூண்டுவதற்காகவே இந்த வரலாறு இங்கு மீட்டப்படுகின்றது. இன்று பரவலாக நோக்குமிடத்து முஸ்லிம்கள் -படித்தவர்கள், பட்டதாரிகள் மாணவர்களுக்கு அறிவை வழங்கும் ஆசிரியர்கள் உட்பட – வாசிப்பில் அக்கறையற்றவர்களாக உள்ளார்கள். புத்தகங்களைச் சுமந்த மாணவர்களை வாசிப்பதற்குத் தூண்டுகின்ற ஆசிரியர்களைக் காண்பது அரிதாக உள்ளது. முஸ்லிம் பாடசாலைகளில் நூல்நிலையங்களைக் கொண்ட பாடசாலைகள் மிகக் குறைவாகவே உள்ளன. பாடசாலைகளில் காணப்படும் நூல் நிலையங்களில் உள்ள நூல்கள் கூட வாசிப்பாரற்று தூசியும் புழுதியும் படர்ந்துள்ளன. பொழுதுபோக்குச் சஞ்சிகைகளை வாசிப்பதில் காட்டப்படும் ஆர்வம் பயனுள்ள,அறிவுபூர்வமான நூல்களை வாசிப்பதில் காட்டப்படுவதில்லை.
இதன் ஒட்டுமொத்தமான விளைவு என்ன! சமூகத்தில் சான்றிதழ் பெற்ற பட்டதாரிகள் பெருகிவருகின்றார்கள். ஆனால் சமூகத்தின் சிந்தனைத் தரம் மிகக் கீழான நிலையில் உள்ளது. முஸ்லிம் மாணவர்களின் மொழித்தரம் மிகக் குறைவாக உள்ளது . அவர்களது அறிவும் பார்வையும் நோக்கும் மிக மேலோட்டமாக உள்ளது. முஸ்லிம்களால் எழுதப்படும் கட்டுரைகளில் பகுப்பாய்வு , விமர்சன நோக்கு என்பன குறைவாகவே உள்ளது. இவை அனைத்துக்கும் மூல காரணம் வாசிப்பின்மையாகும். வாசிப்பு ஒருவனைப் பூரண மனிதனாக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
சமூக மேம்பாட்டிற்கு விரிந்த,ஆழமான, பன்முகப்பட்ட அறிவு அவசியமாகும். எனவே,முஸ்லிம் சிறுவர்கள் ஆரம்ப காலம் முதலே வாசிப்பதற்குத் தூண்டப்படல் வேண்டும். நூல்களை நேசிக்கும் பழக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும்; வீடுகள் தோறும் சில முக்கிய நூல்கள் உள்ளடங்கிய சிறு நூல் நிலையங்கள் பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதில் முஸ்லிம் ஆசிரியர்களினதும் பாடசாலைகளினதும் பங்கு மிகப் பொறுப்பு மிக்கது!
– கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி