சுதீப் சௌத்ரிக்கு வணிகக் கப்பலில் பணியாற்றுவது சாகசம் மிக்கதாகவும், நல்ல வாழ்க்கைக்கு உதவுவதாகவும் இருந்தது. ஆனால், தாயகத்தில் இருந்து வெகு தொலைவில், மேற்கு ஆப்பிரிக்காவில், ஆபத்தான கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல்களில் பயணம் மேற்கொள்வது, அந்த இளம் பட்டதாரியின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போடுவதாக இருந்தது.
போதை மருந்துகளுக்கு ஆட்பட்டிருக்கும் கொள்ளையர்களின் கைகளிலும், அவர்கள் ராஜா என குறிப்பிடும் ஒரு மர்ம மனிதரின் விருப்பத்திற்கு ஏற்பவும் இந்த இளைஞனின் விதி இருந்தது.
எம்.டி. அப்பெக்கஸ் கப்பல் சூரியன் உதயமாகி சற்று நேரத்தில் நைஜீரியாவின் போன்னி தீவுக்கு அருகே நிறுத்தப்பட்டது. சுதீப் சௌத்ரி களைப்பாக இருந்தார். அவரது ஷிப்ட் முடியும் தருவாயில் இருந்தது. அவர் கரையை நோக்கிப் பார்த்தபோது டஜன் கணக்கில் கப்பல்கள் இருப்பது தெரிந்தது. அவற்றைக் கடந்து கடற்கரையோரத்தில், வெள்ளை நிறத்தில் பிரமாண்டமான எண்ணெய் சேமிப்பு டாங்குகள் நிறுவப் பட்டிருந்தன.
காலை உணவை முடித்துக் கொண்டு அவர் இரண்டு பேருக்கு தொலைபேசியில் பேசினார். முதலில் ஒரே மகனான தன்னைப் பற்றிய கவலையில் இருந்த பெற்றோர், திருமணம் செய்து கொள்ளப் போகும் பாக்யஸ்ரீ ஆகியோரிடம் அவர் பேசினார். எல்லாமே திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், அன்றைய பிறகு அழைப்பதாகவும் கூறி விடைபெற்றார். பிறகு அவர் படுக்கப் போய்விட்டார்.

அது 2019 ஏப்ரல் 19 ஆம் தேதி. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் சிறிய எண்ணெய் டேங்கர் கப்பல், 15 ஊழியர்களுடன் 2 நாட்களாக லாகோஸ் துறைமுகத்தில் இருந்து தெற்கு திசையில் நைஜர் டெல்ட்டா நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தனர். விரைவில் செல்வம் குவிக்க விரும்பிய டச்சு மற்றும் பிரிட்டன் தொழிலபதிபர்கள் 1950களில் அங்கு கச்சா எண்ணெய் இருப்பதை கண்டுபிடித்திருந்தனர். அந்த டெல்ட்டாவின் சதுப்புநிலப் பகுதியில் கடற்கொள்ளையர்கள் நடமாட்டம் இருக்கிறது என்பது சுதீப்புக்குத் தெரியும். இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பதாகவே அவர் நினைத்தார். நைஜீரியாவின் கடற்படைப் படகுகள் அங்கு ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன. அப்பெக்கஸ் கப்பல் போன்னி துறைமுகத்தில் இருந்து 7 கடல் மைல்கள் தொலைவில் நங்கூரமிட்டு நின்றிருந்தது. துறைமுகத்தில் நுழைவதற்கு அனுமதியை எதிர்நோக்கி கப்பல் காத்துக்கொண்டிருந்தது.
ஏழு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கடலோரப் பகுதிகளைக் கொண்ட கினியா வளைகுடாவின் கடற்பகுதி உலகில் மிகவும் ஆபத்தான பகுதியாகக் கருதப்படுகிறது. கடற்கொள்ளைக்கு பெயர் பெற்ற பகுதியாக சோமாலியா இருந்து வந்தது. ஆனால் இப்போது இந்தப் பகுதியை மையமாகக் கொண்டு கடற்கொள்ளையர்கள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் உலக அளவில் கடல் பயணிகளிடம் நடந்த கொள்ளைகளில், 90 சதவீத சம்பவங்கள் இந்தப் பகுதியில் நிகழ்ந்துள்ளன. 2019 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 6 கப்பல்களில் இருந்து 64 பேர் கடத்தப்பட்டனர் என்று, இதுபோன்ற நிகழ்வுகளைக் கண்காணித்து வரும் சர்வதேச கடல்சார் குழு தெரிவித்துள்ளது. தகவல் பதிவாகாத வேறு பல சம்பவங்களும் நடந்திருக்கலாம்.

அந்தப் பகுதியில் ஏராளமான கச்சா எண்ணெய் கிடைப்பதால் அந்த டெல்டாவில் வாழும் மக்கள் வளம் அடைந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு அதுவே சாபமாகிவிட்டது. எண்ணெய்க் கசிவுகள் தண்ணீர் மற்றும் நிலத்தை விஷமாக்கிவிட்டது. அந்தத் தொழில் காரணமாக ஏற்படும் தீங்குகள் வன்முறைக்கும், மோதல்களுக்கும் வித்திட்டு பல தசாப்த காலங்களாக தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. நைஜீரிய அரசுக்கும், சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கும் பல பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும், எண்ணெய் குழாய்கள் அமைந்துள்ள கிராமங்களில் வாழும் மக்களின் ஆயுள் சுமார் 45 ஆண்டுகள் என்ற அளவில் மட்டுமே உள்ளது.
காமிக்ஸ் புத்தகங்களில் வருவதைப் போன்ற நைஜெர் டெல்ட்டா அவெஞ்சர்ஸ் என்பவை போன்ற பெயர்களைக் கொண்ட தீவிரவாத குழுக்கள் இந்தக் குழாய்களை வெடி வைத்து தகர்த்து, எண்ணெய் உற்பத்தியை முடக்குகின்றன. அந்த சொத்து மற்றும் வளங்களை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். எண்ணெய் திருடுபவர்கள், வனப் பகுதிகளில் மறைவாக செயல்படும் தற்காலிக சுத்திகரிப்பு மையங்களுக்கு கருப்பு கச்சா எண்ணெயை கொண்டு சென்று, சுத்திகரிப்பு செய்கின்றனர். அந்த டெல்ட்டா பகுதியில் வன்முறைகள் குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. ஆனால் எப்போதுமே அந்த அச்சுறுத்தல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
கூச்சல் மற்றும் பலத்த சப்தம் கேட்டு சில மணி நேரத்தில் சுதீப் எழுந்து கொண்டார். கப்பலின் மேல் தளத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த காவலர், ஆயுதங்களுடன் 9 பேர் கொண்ட ஒரு விரைவுப் படகு தங்களை நோக்கி வருவதைக் கவனித்துள்ளார். அவர் எழுப்பிய கூச்சல்தான் 80 மீட்டர் நீளம் கொண்ட அந்தக் கப்பலில் எல்லோரையும் அலற வைத்தது. கடற்கொள்ளையர்களை அவர்களால் தடுக்க முடியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் ஒளிந்து கொள்ள முயற்சி செய்தார்கள்.

28 வயதான சுதீப், கப்பல் பொறுப்பில் 3ம் நிலை அதிகாரியாக இருந்தார். கப்பலில் வேலை பார்த்த வேறு 5 இந்தியர்கள் அவருக்கு கீழே இருந்தனர். கப்பலில் எண்ணெய் கிடையாது. எனவே கொள்ளையர்கள் ஆட்களைக் கடத்திச் சென்று பணம் கேட்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களை கடத்திச் சென்றால் அதிக பணம் கிடைக்கும். அவர்களுடைய நிறுவனங்கள்தான் அதிக அளவில் பணம் தரும். ஆனால், பெரும்பாலான மாலுமிகள் வளரும் நாடுகளில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அப்பெக்கஸ் கப்பலில், இந்தியர்கள் மட்டுமே ஆப்பிரிக்கர் அல்லாதவர்களாக இருந்தனர்.
ஐந்து நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், கப்பலின் கீழ்ப் பகுதியில் என்ஜின் அறைக்கு தன் குழுவினரை அழைத்துச் சென்ற சுதீப், கப்பலில் எல்லோரையும் எச்சரிப்பதற்கு எமர்ஜென்சி அலாரத்தை ஒலிக்கச் செய்தார். தூங்கச் சென்ற போது அணிந்திருந்த உள்ளாடையை மட்டுமே கீழே அணிந்திருப்பதை, அவர் கீழே திரும்பி வரும்போதுதான் கவனித்திருக்கிறார். முதலில் அவர் கவனித்தபோது கொள்ளையர்கள் டி-சர்ட்கள் அணிந்து, கருப்புத் துணியால் முகங்களை மூடியிருந்தனர். அவர்கள் துப்பாக்கி ஏந்தி இருந்ததை அவர் பார்த்தார்.
கப்பலின் அருகில் அவர்கள் படகை நிறுத்தி, மேலே ஏறுவதற்கு ஏணியை பொருத்திக் கொண்டிருந்தனர். சிறிய ஸ்டோர் அறையில் ஒளிந்து கொள்வது என்று இந்தியர்கள் முடிவு செய்தனர். மின் விளக்குகள், வயர்கள் மற்றும் மின்சார பொருட்களுக்கு மத்தியில் அவர்கள் நெருக்கியடித்து ஒளிந்தனர். பயத்தில் மூச்சுவிடாமல் நிறுத்தவும் முயற்சி செய்தனர். கடற்கொள்ளையர்கள் உள்ளே வந்து தேடினர். அவர்களுடைய குரல் என்ஜின்களில் பட்டு எதிரொலித்தது. கப்பல் குழுவினர் நடுங்கிக் கொண்டிருந்தனர், ஆனால் அமைதியாக இருந்தனர். இதுபோன்ற சூழ்நிலைகளில், கப்பல் குழுவினர் பதுங்கிக் கொள்வதற்கு, துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத சுவர் தடுப்புகளைக் கொண்ட பாதுகாப்பு அறைகளை, கினியா வளைகுடா பகுதியில் செல்லும் பல கப்பல்களில் உருவாக்கியுள்ளனர். ஆனால் அபெக்கஸ் கப்பலில் அந்த வசதி இல்லை. காலடி ஓசைகள் நெருங்கி வருவதையும், கதவின் தாழ்ப்பாளை திறக்கும் ஒலியையும் அவர்கள் கேட்டார்கள்.
“எழுந்திரு”
தரைப் பகுதியை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். துப்பாக்கிக் குண்டின் சிதறிய பகுதி சுதீப்பின் இடது முழங்காலில் பட்டு, எலும்பின் அருகே சிக்கிக் கொண்டது. கப்பல் குழுவினரை கொள்ளையர்கள் அழைத்துக் கொண்டு மேல்தளத்துக்குச் சென்றனர். அவர்கள் வேகமாகச் செயல்பட்டாக வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். அவசர உதவிக்கான அழைப்பை கேப்டன் அனுப்ப வேண்டும். துப்பாக்கியால் சுட்ட சப்தத்தை மற்ற கப்பல்களில் இருந்தவர்கள் கேட்டிருப்பார்கள்.
காத்திருந்த விரைவுப் படகிற்கு ஏணி வழியாக இறங்கிச் செல்லுமாறு இந்தியர்களுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். கூடுதல் வேகத்துக்காக அந்தப் படகில் இரண்டு என்ஜின்கள் பொருத்தியிருந்தனர். முதன்முறையாக கடற்பயணம் மேற்கொண்டிருந்த 22 வயதான சிராக், பதற்றத்துடன் முதலில் அந்த உத்தரவுக்குப் பணிந்தார். துப்பாக்கிமுனையில் மிரட்டப்பட்ட நிலையில் கேப்டன் உள்ளிட்ட மற்றவர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
ஐந்து இந்தியர்கள், ஒரு நைஜீரியர் என ஆறு பிணைக் கைதிகளும், படகில் நெருக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர். ஒளிந்து கொண்டதால் கொள்ளையர்களிடம் சிக்காத இன்னொரு இந்தியர் உள்ளிட்ட கப்பல் குழுவினர், கப்பலின் மேல் தளத்துக்குச் சென்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே. கடற்கொள்ளையர் தங்களிடம் சிக்கிய பிணைக் கைதிகளின் கண்களைக் கட்டி படகில் அழைத்துச் சென்றனர்.
இரவு நேரத்தில் கப்பல் ஏஜென்டிடம் இருந்து வந்த தகவல்.
“ஐயா, சுதீப் சென்ற கப்பல் கடத்தப் பட்டிருப்பதாக அறியப்படுகிறது. கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அதன் உரிமையாளர் பேச்சு நடத்தி வருகிறார். பதற்றம் வேண்டாம். சுதீப்புக்கு எந்த ஊறும் நேராது. தயவுசெய்து பொறுமை காத்திடுங்கள்”.
இந்த செய்தியைப் பார்த்ததும் பிரதீப் சௌத்ரியும், அவருடைய மனைவி சுனிதியும் தங்கள் படுக்கை அறையில் செய்வதறியாமல் அமர்ந்திருந்தனர். சில மணி நேரத்துக்கு முன்புதான் தங்களுடைய மகனுடன் பேசியிருந்தனர். இந்தத் தகவலை குடும்பத்தினர் மற்றும் சுதீப்பின் நெருக்கமான நண்பர்களுக்கு பிரதீப் அனுப்பினார். இது உண்மையாக இருக்குமா? மகனுடன் யாராவது தொடர்பு கொண்டீர்களா? என்று அவர் கேட்டிருந்தார்.

குறும்புத்தனங்களுடன் வளர்ந்தவர் சுதீப். ஓய்வாக உட்கார்ந்திருக்க மாட்டார். வீட்டுக்கு வெளியில் சுற்றுவதையே அவர் விரும்புவார். அவருடைய பெற்றோருக்கு, குறிப்பாக அவருடைய தாய்க்கு எப்போதும் இவரைப் பற்றியே கவலையாக இருக்கும். இந்தியாவின் கிழக்கு கடலோர மாநிலமான ஒடிஷா மாநிலம் புவனேஷ்வர் நகரில் அவர்கள் வசிக்கின்றனர். தங்கள் வீட்டில் முன்பகுதியில் ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் நிறைய கோவில்கள் உண்டு. ஆனால், ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு வரையில் சுதீப்புக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவரும், பாக்யஸ்ரீயும் உருவாக்கிக் கொள்ளப்போவதே வாழ்க்கை என்பதாக இருந்தது. பாக்யஸ்ரீ ஒரு மென்பொருள் பொறியாளர்.
தங்களுடைய பெற்றோர் விரும்பிய, நிலையான பாரம்பரிய வாழ்க்கை என்பதற்கு மாறாக லட்சியம் நிறைந்த ஜோடி அது. பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் இவர்களைப் போல பல லட்சம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பலருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பதில்லை.
வணிகக் கப்பலில் வேலைவாய்ப்பு என்பது, இந்த நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்கான வழியாக சுதீப்புக்கு அமைந்தது. நல்ல பணம் கிடைக்கும், நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கும், உலகை சுற்றிப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்ற வார்த்தைகளால் அவர் ஈர்க்கப்பட்டார். அவர் மட்டும் தான் இப்படி ஈர்க்கப்பட்டார் என்பதில்லை. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் கப்பல்களில் வேலைக்கு செல்லும் நிலையில் இந்தியர்கள் இருக்கிறார்கள். பொறியாளர்கள், சமையலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் செல்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி வெளிநாட்டு கப்பல்களில் 2.34 லட்சம் இந்தியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சரியான கல்வித் தகுதியைப் பெறுவது சிக்கலாக உள்ளது. சுதீப் ஐந்தாண்டுகள் படித்தபோது, அவருடைய குடும்பத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவானது. 27 வயதில், அவர் மூன்றாம் நிலை அதிகாரியாகத் தகுதி பெற்றார். அதைக் கொண்டாட வலது முன்கையில் ஒரு பச்சை குத்திக் கொண்டார். கடலில் செல்லும் சிறிய படகும், சில முக்கோணங்களும் கொண்டதாகவும், பெரிய நங்கூரம் கொண்டதாகவும், கடல் பயணத்தைக் குறிப்பிடும் வகையில் அவர் பச்சை குத்திக் கொண்டார்.
கப்பல் ஊழியர்கள் கடத்தப்பட்ட முதலாவது நாள் காலையில், காட்டுக்குள் இருந்து ஒரு டஜனுக்கும் மேற்பட்டவர்கள் வெளிப்பட்டனர். மகிழ்ச்சியைக் கொண்டாட சுமார் அரை மணி நேரம் அவர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தனர். அலையாத்தி மண்டிய சதுப்புநிலப் பகுதியில் மிதந்துகொண்டிருந்த கார் அளவிலான மரப் பலகை மீது அமர வைக்கப்பட்டிருந்த ஐந்து இந்தியர்களும், நம்பிக்கை இழந்திருந்தனர்.
இந்த காட்டுச் சிறைப் பகுதிக்கு வருவதற்கு இவர்களை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக படகில் கொள்ளையர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் பிணைத் தொகை தராவிட்டால் உங்களைக் கொன்று விடுவோம் என்றுதான் ஆரம்ப நாட்களில் அவர்களிடம் கொள்ளையர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

சுதீப் இன்னும் இடுப்புக்குக் கீழே உள்ளாடையுடன் மட்டுமே இருந்தார். இரவில் கொசுக்கடிகளை தாங்க வேண்டியதாயிற்று. அதனால் அவருடைய தோலில் புள்ளி புள்ளியாக தழும்புகள் ஏற்பட்டன. காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தும் தரவில்லை. அதனால் குண்டு சிதறல் பட்ட இடத்தில் ஏற்பட்ட துளையை சேறு வைத்து பூசிக் கொண்டார். காட்டுக்குள் ஈரப்பதம் இருந்ததால், இந்தியர்களுக்கு ஒருபோதும் களைப்பு ஏற்படவில்லை. அழுக்கான ஒரு விரிப்பின் மீது அவர்கள் படுத்து தூங்கினர். சில நிமிடங்கள் தூங்கியதும், தாங்கள் பிணைக் கைதியாக இருப்பது நினைப்பு வந்து விழித்துக் கொள்வார்கள்.
முன்னர் கடத்தி வரப்பட்ட நபர்களின் முதலாளி பிணைத் தொகை தர மறுத்ததால், அந்த நபருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் காட்டுவதற்காக கொள்ளையர்கள் ஒரு எலும்புக் கூட்டை எடுத்து வந்து காட்டினர். அது ஒரு கொடூரமான மிரட்டல். இன்னொரு நாள், கான்கிரீட் தூண்களைக் காட்டினர். நீங்கள் ஏதாவது செய்ய முயற்சித்தால் இதை உங்கள் காலில் கட்டி கடலில் வீசிவிடுவோம் என்று கொள்ளையர்கள் கூறினர்.
கரையில் சுமார் 10 மீட்டர் தள்ளி காவலுக்கு சிலர் நின்றிருந்தனர். அவர்கள் மீன் பிடித்தல், கஞ்சா புகைத்தல், பனை மரத்தில் இருந்து தயாரித்த மதுவை அருந்துதல் என நேரத்தை செலவிட்டனர். ஆனால், கடத்தி வந்தவர்கள் மீது எப்போதும் கவனத்தை வைத்துக் கொண்டிருந்தனர். கடத்தப்பட்டவர்கள் நீரில் குதித்து நீந்தி தப்பிச் செல்ல முயற்சிக்கக் கூடும் என்பதைப் போல, சில நேரம் அவர்கள் துப்பாக்கிகளைக் காட்டி, உரத்த குரலில் மிரட்டுவார்கள்.
சில நாட்களில், கொள்ளையர்களில் யாருடனாவது பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள சுதீப் முயன்றார். அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா என்றெல்லாம் கேட்பார். ஆனால் மௌனம் தான் பதிலாகக் கிடைக்கும். அல்லது எங்களுடன் பேசாதே என வெறுப்பாகக் கூறுவார்கள். அவர்கள் கடுமையான உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர்கள் போல தெரிந்தார்கள். ஆனால் தங்கள் தலைவர் யார் என ஒருபோதும் அவர்கள் குறிப்பிடவில்லை. காட்டில் வேறு எங்கோ அவர் இருப்பதாகத் தெரிந்தது. அவர் தான் “ராஜா” என மதிக்கப்படுகிறார்.

சுதீப்பும், 22 வயதான சிராக், 21 வயதான அங்கித், 22 வயதான அவினாஷ், 34 வயதான மூகு ஆகியோருக்கு, ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதுவே பழகிவிட்ட வாழ்க்கையாக மாறிவிட்டது. ஒரு நாள், காலையில், அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் தயாரித்துக் கொடுப்பார்கள்.
ஐந்து பேரும் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் கொடுத்து, ஆளுக்கு ஒரு ஸ்பூன் சாப்பிட்டதும் அடுத்தவரிடம் ஸ்பூனை தர வேண்டும் என்ற வகையில் அவர்கள் கட்டாயப்படுத்தினர். மாலையிலும் இதேபோல தருவார்கள். பாத்திரத்தை காலி செய்துவிட்டு தந்துவிட வேண்டும்.
சேறாக இருக்கும் தண்ணீரை தவிர, குடிப்பதற்கு அவர்களுக்கு வேறு எதுவும் தர மாட்டார்கள். அதில் பெரும்பாலும் பெட்ரோல் கலந்திருக்கும். சில நேரம் தாகமாக இருந்தால், ஆற்றில் இருந்து உப்பு நீரை குடித்துக் கொள்வார்கள். நைஜீரியாவை சேர்ந்த கேப்டனை அருகில் ஒரு குடிசையில் தனியாக வைத்திருந்தனர். அவரை நல்ல முறையில் நடத்தினர். அதனால் அவரை இந்தியர்கள் வெறுத்தனர்.
நேரத்தைக் கடத்துவதற்காக, தங்களுடைய வாழ்க்கை பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் 5 பேரும் பேசிக் கொண்டிருப்பார்கள். சுற்றியுள்ள இயற்கையைக் கவனிப்பார்கள். மரத்தின் மீது ஏறும் பாம்புகள், சதுப்புநிலப் பகுதியில் பறக்கும் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிரார்த்தனை செய்வார்கள். ஒரு குரங்கை கொள்ளையர்கள் பார்த்துவிட்டால், அமைதி கலைந்துவிடும். அவர்கள் ஓடி வந்து அதை துப்பாக்கியால் சுட்டுவிடுவார்கள். அதை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் ஒருபோதும் அந்த மாமிசத்தை இந்தியர்களுடன் பகிர்ந்து கொண்டது கிடையாது.

தாங்கள் படுத்திருந்த பலகையில் கோடுகள் போட்டுக் கொண்டு, எத்தனை சூரிய அஸ்தமனங்கள் முடிந்துள்ளன என்று அவர்கள் கணக்கிட்டுக் கொண்டனர். சில நேரம் உணர்ச்சி வேகத்தில் இருந்தனர். சுதீப் உள்ளிட்ட சிலருக்கு மலேரியா தாக்கியது. ஒருவேளை தங்களைக் கொல்வதற்கு கொள்ளையர்கள் வந்தால், திருப்பிப் போராட வேண்டும் என்று, முணுமுணுப்பாக அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நாம் சாவதற்குள் குறைந்தபட்சம் 3 பேரையாவது நாம் சாய்த்துவிட வேண்டும் சரியா என்று கூறிக்கொண்டனர்.
இதுபோன்ற தருணங்களில் அவர்கள் சிரித்துக் கொள்வார்கள். ஆனால் கவலையில் மூழ்கிவிடாமல் இருக்க தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. அமைதியான சில மணி நேரங்களில், சுட்டெரிக்கும் வெயிலில் அவர்கள் வெறுமனே படுத்துக் கிடந்தனர். தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைத்தால் இந்திய தூதரகத்துக்கோ அல்லது தன் குடும்பத்துக்கோ என்ன தகவலைக் கூற வேண்டும் என்பது பற்றி சுதீப் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தார். தனது திருமணத்துக்கான திட்டம் இன்னும் அவருடைய சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் கொள்ளையர்கள் பல மில்லியன் டாலர்கள் கேட்டனர். அது மிக அதிகமான தொகை என்பதால், அதைத் தர மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இதுபோன்று, பணத்துக்காக ஆட்களைக் கடத்தும்போது, நைஜெர் டெல்ட்டாவில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பகுதிகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும், அது அவர்களுக்கு சாதகமாகவே முடியும்.
சுமார் 15 நாட்கள் கழித்து சுதீப்பை கொள்ளையர்கள் ஒரு படகில், காட்டில் வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். கப்பலின் உரிமையாளரான கிரேக்க தொழிலதிபருடன் நேரடியாகப் பேசி கோரிக்கை வைப்பதற்காக சுதீப்பிடம் அவர்கள் ஒரு செயற்கைக்கோள் செல்போனை கொடுத்தனர். அவருடைய முதலாளியான கேப்டன் கிறிஸ்ட்டோஸ் டிரெய்யோஸ், பிராயஸ் துறைமுகப் பகுதியில் இருக்கிறார். பெட்ரோகிரெஸ் இன்க் என்ற அவருடைய நிறுவனம் மேற்கு ஆப்பிரிக்காவில் பல எண்ணெய் கப்பல்களை இயக்கி வருகிறது.

கேப்டன் கிறிஸ்ட்டோஸ் பற்றி சுதீப் அதிகம் கேள்விப்பட்டதில்லை. ஆனால், அவர் கோபக்காரர், வன்மையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறார். “சார், இது கொடூரமாக உள்ளது. நாங்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறோம். நீங்கள் மிக வேகமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் நாங்கள் இங்கே இறந்துவிடுவோம் போல தெரிகிறது” என்று அவரிடம் கூறினார். நடந்த விஷயங்கள் பற்றி கோபம் அடைந்த அவருடைய முதலாளி, இதில் மனம் மாறியதாகத் தெரியவில்லை.
“எங்களுக்குப் பணம் வேண்டும்” என்பதை மட்டும் கொள்ளையர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். “ஆனால் உங்கள் ஆட்கள் பணம் தராவிட்டால், உங்களைக் கொன்று விடுவோம்” என்றும் கூறினார்கள்.
அந்தக் கப்பல்களுக்கு காப்பீட்டு வசதி இருப்பதால், வாரக் கணக்கில் பேச்சு நடத்திவிட்டு கணிசமான ஒரு தொகையைக் கொடுத்து தங்கள் கப்பல் ஊழியர்கள் முதலாளிகள் மீட்டுக் கொள்வார்கள் என்பது அவர்களுடைய நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது மனம் இளகாத முதலாளியுடன் அவர்கள் பேச வேண்டியுள்ளது. எனவே, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தை தொடர்பு கொள்வது தான் பரவாயில்லை என்று கடத்தல்காரர்கள் அறிந்து கொண்டனர்.
இந்தியாவில் சுதீப்பின் பெற்றோர் இரவுகளில் தூங்காமல் விழித்துக் கிடந்தனர். என்ன நடந்தது என்பது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. கடற்கொள்ளையர்களிடம் இருந்து தங்கள் மகன் திரும்பி வராமலே போய்விடுவானோ என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
கடற்கொள்ளையர்களுக்கு நேரடியாக, குடும்பத்தினர் பணம் தருவதற்கு வழி கிடையாது. அது ஒரு வழிமுறையாகவும் இருக்கவில்லை. இந்திய அரசாங்கம் பிணைத் தொகைகளைத் தருவதில்லை. ஆனால் ஏதாவது ஒரு வகையில் உதவும் என்று அவர்கள் நம்பினர். நைஜீரிய கடற்படைக்கு உதவி, கடற்கொள்ளையர்களின் முகாமைக் கண்டறியவோ அல்லது கப்பல் உரிமையாளரை பணம் தர வைக்கவோ இந்திய அரசு முயற்சிக்கும் என்று நம்பினர். சுதீப்பின் ஒன்றுவிட்ட சகோதரியான, 30 வயது கடந்த ஸ்வப்னாவும், பாக்யஸ்ரீயும் இந்த முயற்சிகளை முன்னெடுத்தனர். கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரைக் கண்டறிந்து வாட்ஸப் குழு உருவாக்கி, அவர்களை விடுவிக்கும் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர்.
கடத்தப்பட்டவர்களைக் கொல்வதால், கொள்ளையர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை என்பதை பாக்யஸ்ரீ சீக்கிரம் தெரிந்து கொண்டார். ஆனால் அவர்கள் எவ்வளவு நாட்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று கவலைப்பட்டார்.
எல்லா வழிகளிலும் கப்பல் உரிமையாளருக்கு நிர்பந்தம் தருவதுதான், தாம் மணக்கப் போகும் சுதீப்பை விடுவிப்பதற்கான ஒரே வழி என்று பாக்யஸ்ரீ கருதினார். எனவே, காரில் பயணிக்கும்போது, குளியல் அறையில், பணியில் இருக்கும்போது, படுத்திருக்கும் போது என எல்லா நேரத்திலும் அவர் ஆன் லைனிலேயே இருந்தார். யாரெல்லாம் உதவி செய்ய முடியுமோ அவர்களுக்கு ட்வீட் செய்தல், கோரிக்கை இமெயில்கள் அனுப்புதல் என அவர் செயல்பட்டார்.

மூன்று வார கால அமைதிக்குப் பிறகு, 17வது நாள், குடும்பத்தினருக்கு ஒரு வழி கிடைத்தது. கடத்தப்பட்ட அவினாஷ் என்பவரின் சகோதரிக்கு, நைஜீரிய காட்டுப் பகுதியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அனைத்து ஆண்களும் உயிருடன் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்று அந்த நபர் கூறியிருக்கிறார். மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால் பாக்யஸ்ரீ மற்றும் சௌத்ரிக்கு வரவில்லை.
விநோதமான உறவு உருவாக்கப்பட்டது. கடத்தப்பட்டவர்களில் ஒருவருடைய உறவினரான கேப்டன் நசீப் என்பவர், செயற்கைக்கோள் செல்போன் மூலமாக கடற்கொள்ளையர்களுடன் தொடர்பு கொண்டு, கடத்தப்பட்டவர்களின் நிலை பற்றி கேட்டறிந்து வந்தார். ஆனால், அவர் வாட்சாப் மூலம் அனுப்பிய ஒலி குறைந்த ஆடியோ பதிவுகள் அவர்களுடைய குடும்பத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. கப்பலின் உரிமையாளர், கடத்தப்பட்டவர்களின் “உயிர்கள் பற்றி கவலைப்படவில்லை”. அந்த சூழ்நிலை “விளையாட்டுக் களம்” போல மாறிவிட்டது என்று கடற்கொள்ளையன் ஒருவன் கேப்டன் நசீப்பிடம் கோபமாகக் கூறியுள்ளான்.
2019 மே 17 ஆம் தேதி, 28வது நாளில், கேப்டன் நசீப்புடன் பேச சுதீப்புக்கு கொள்ளையர்கள் ஒரு வாய்ப்பு அளித்தனர். இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே இந்தத் துயரம் நீடிக்கும் என்று அப்போது கேப்டன் நசீப் நம்பிக்கை கொடுத்திருந்தார். ஆனால், அதிகாரி என்ற பொறுப்பில், தன் குழுவில் உள்ள அனைவருக்கும் நம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டிய நிலையில் சுதீப் இருந்தார். “நான் முயற்சி செய்கிறேன்” என்று ஹிந்தியில் சுதீப் கூறுவது குரல் பதிவில் அரைகுறையாகக் கேட்கிறது. “நீங்கள் என்னுடன் பேசியதாக என் குடும்பத்தினரிடம் கூறுங்கள்” என்றும் அவர் சொல்கிறார்.
சில வாரங்களுக்கு ஒரு முறை இந்தியர்களை காட்டில் வெவ்வேறு பகுதிக்கு மாற்றிக் கொண்டிருந்தனர். கேப்டன் கிறிஸ்ட்டோஸ் உடன் பேச்சுவார்த்தை முறிந்துவிட்ட நிலையில், கொள்ளையர்களின் ராஜா என கருதப்பட்டவரே நேரடியாக அவர்களை சந்திக்கத் தொடங்கினார். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் மற்றவர்கள் அவருடன் அச்சத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டனர். அவருடைய ராட்சத உருவம் தான் அந்தக் கூட்டத்துக்கு தலைவராக இருக்கும் வாய்ப்பை அளித்திருக்கும் என்று தெரிகிறது.
கொள்ளையர்கள் அனைவருமே, திடகாத்திரமானவர்களாக, அச்சம் தரும் தோற்றம் உள்ளவர்களாக இருந்தனர். ஆனால் ராஜா நிலையில் இருந்த அவர் 6 அடி 6 அங்குல உயரத்தில் ராட்சதன் போல இருந்தார். மற்றவர்களைவிட அவர் பெரிய துப்பாக்கி வைத்திருந்தார். குண்டுகள் நிரப்பிய தோல் பெல்ட் அணிந்திருந்தார். எப்போதும் அதை அவர் அணிந்திருந்தார்.
நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை அவர் வந்தார். பிணைக் கைதிகள் எதிரே அமைதியாக கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பார். கேப்டன் கிறிஸ்ட்டோஸ் இறங்கி வர மறுக்கிறார், அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறுவார். மற்றவர்களைவிட அவருடைய ஆங்கிலம் நன்றாக இருந்தது. கடத்தப்பட்டு பல வாரங்கள் ஆன நிலையில், பிணைக் கைதிகள் உடல் மெலிந்துவிட்டது; கண்கள் மஞ்சள் நிறமாகிவிட்டன. சிறுநீர் ரத்த சிவப்பு நிறத்திற்கு மாறிவிட்டன. ஒவ்வொரு முறை கூட்டத்தின் தலைவன் வரும் போதெல்லாம், சேற்றில் இருந்து எடுத்துக் காட்டிய எலும்புக் கூட்டின் நிலைக்கு ஆளாவோம் என்ற அச்சம் தோன்றும்.

நிலைமை மோசமானது. இதுவரையில், அப்பெக்கஸ் கப்பலுக்கு ஏற்பட்டது பிணைத் தொகைக்கான கடத்தல் போன்றே இருந்தது. ஆனால் மே மாதத்தின் பிற்பகுதியில் நிலைமை சிக்கலாக மாறியது.
நைஜெர் டெல்ட்டாவில் இருந்து கச்சா எண்ணெயை திருடி கானாவுக்கு கொண்டு செல்வதில் ஈடுபட்டதாக டேங்கர் நிறுவனம் மீது நைஜீரிய கடற்படை வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியது. இரண்டு கிரிமினல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகத் தான் அப்பெக்கஸ் கப்பல் மீதான தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் கடற்படை கூறியது. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டதை நைஜீரியாவில் உள்ள கப்பல் நிறுவனத்தின் மேலாளர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.
கப்பலின் உரிமையாளர் கேப்டன் கிறிஸ்ட்டோஸ் இதை உறுதியாக மறுத்துள்ளார். “தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி, அதிகமான தொகையை” செலுத்த நிர்பந்தம் ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய கப்பல்களையும், அலுவலர்களையும் பிடித்து வைக்க நைஜீரிய கடற்படையை இந்திய அரசு பயன்படுத்துகிறது என்று அவர் குற்றஞ்சாட்டும் இமெயில்களை பிபிசி குழு பார்த்தது. இதை இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளனர். நைஜீரிய கடற்படை தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
பிணைக் கைதிகளுக்கு துயரமான சூழ்நிலையாக இது இருந்தது. ஆனால் நைஜீரியாவில் கேப்டன் கிறிஸ்ட்டோஸின் கப்பல்கள் இயங்குவதற்கு நெருக்கடியை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள், கடற்கொள்ளையர்களுடன் ஒரு சமரசத்துக்கு வருவதற்கு அவரை நெருக்குவதாக இருந்தன. பேச்சு வார்த்தை முடிந்துவிட்டதாகவும், பணம் செலுத்தப்படுவதாகவும் இந்திய அரசிடம் இருந்து ஜூன் 13 ஆம் தேதி சுதீப்பின் குடும்பத்தினருக்குத் தகவல் வந்தது. அதேசமயத்தில், தங்களுடைய துயரங்கள் சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று காட்டில் அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
முந்தைய 70 நாட்களைப் போலவே 2019 ஜூன் 29 ஆம் தேதி காலையிலும் அவர்கள் எழுந்தனர். காலையில், நூடுல்ஸ் பாத்திரத்தைக் கொடுத்தார்கள். எல்லாம் நல்லபடியாக நடந்தால், இதுதான் காட்டில் உங்களுக்குக் கடைசி நாளாக இருக்கும் என்று சுதீப்பிடம் ஒரு கொள்ளையர் குனிந்து ரகசியமாகக் கூறினார். இரண்டு மணி நேரம் கழித்து காவலர் வந்தார். பணத்துடன் ஒருவர் வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
கானாவை சேர்ந்த 60 வயதைக் கடந்த ஒரு நபர் அன்று மதியம் படகில் வந்தார். அமெரிக்க டாலர்களை நிரப்பிய பிளாஸ்டிக் பையை அவர் வைத்திருந்தார். அவர் வந்த சில நிமிடங்களில், ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தெரிந்தது. அந்த முதியவரை கொள்ளையர்கள் அடிக்கத் தொடங்கினர். பணம் குறைவதை அறிந்த கூட்டத்தின் தலைவன் கத்தியை எடுத்து, அவருடைய காலில் குத்தினார். சேறான தரையில் விழுந்து அவர் துடித்தார்.
கானா நபர் அங்கேயே இருப்பார் என்றும் மற்ற ஆறு பிணைக் கைதிகளும் போகலாம் என்றும் பிறகு அவர் இந்தியர்களிடம் கூறினார். தன்னுடைய ஆட்கள் அவர்களைத் தடுக்க மாட்டார்கள் என்றும், ஆனால் வேறொரு கடற்கொள்ளை கும்பல் அவர்களைப் பிடித்தால், அது உங்கள் பிரச்சினை என்றும் கூறினார். சுதீப்பை பார்த்து “பை பை” என்று அவர் சொன்னார்.
பிணைக் கைதிகள் தயங்கவில்லை. பணம் கொண்டு வந்தவர் வந்த படகு நிறுத்தியிருந்த இடத்துக்கு ஓடினர். தாங்கள் எங்கிருந்து வந்தோமோ அங்கே அழைத்துச் செல்லுமாறு ஓட்டுநரை சுதீப் கேட்டுக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து, இன்னும் அவர் கீழே உள்ளாடையுடன் இருந்தார். கொள்ளையர்கள் அவருக்கு கிழிந்த ஒரு டி-சர்ட் கொடுத்திருந்தார்கள். படகு தத்தளித்துக் கொண்டே பயணித்தது.
சுமார் 4 மணி நேரம் கழித்து, எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறி, படகுத் துறை ஒன்றில் ஓட்டுநர் நிறுத்திவிட்டார். அங்கே சிறிய கிராமத்திற்கு வெளியே, வெறும் கால்களுடன் சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். விடுதலையாகி வந்தவர்களைப் பார்த்து அவர்கள் விசாரித்தனர். கடத்தப்பட்டு விடுதலையாகி வந்திருப்பதாகக் கூறியதும், ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று பாட்டில்களில் தண்ணீர் கொடுத்தனர். கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இரவில் வெளியில் காவலுக்கு நின்றிருந்தனர். உடல் நலிவாக இருந்தாலும், இந்தியர்கள் அப்போது பாதுகாப்பாக உணர்ந்தனர். “கடவுளே அவர்களை எங்களை மீட்பவர்களாக அனுப்பியதைப் போல இருந்தது” என்று பிறகு சுதீப் கூறினார்.

சீக்கிரமே அவர்கள் மும்பை செல்லும் விமானத்துக்கு லோகோஸில் காத்திருக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். முதல்முறையாக தன்னுடைய ஹோட்டல் அறையில் தனிமையில் இருந்த சுதீப், குளிர்ச்சியான பீர் அருந்தினார். பிறகு குளித்தார். அவர் தன்னுடைய உடம்பில் இருந்த தழும்பை பார்த்தார். சில நாட்களுக்கு முன்பு கொள்ளையன் ஒருவன் மீன் வெட்டும் கத்தியால் அவருக்கு காயம் ஏற்படுத்தி இருந்தான். அவருக்கு ஒரு சிகரெட் பாக்கெட்டை இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கொடுத்தார். அதில் இருந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் 12 சிகரெட்களை பிடித்தார் சுதீப். மோட்டுவளையை முறையை முறைத்தபடியே அவர் புகைத்துக்கொண்டிருந்தார். தன்னை சூழ்ந்திருந்த தண்ணீர் குளிரும் வரையில் அப்படி இருந்தார்.
அவர்கள் விடுதலை செய்யப்பட்டு 18 மாதங்கள் ஆகிவிட்டன. மஞ்சள் நிற புடவை உடுத்தியிருக்கும் சுனிதி, சமையல் அறையில் தரையில் அமர்ந்தபடி சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து சில மீட்டர் தள்ளி அமர்ந்து அவருடைய கணவர், நியூசிலாந்தில் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவதை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மாடியில் இருக்கும் தன் மகனை கீழே வந்து சாப்பிடுவதற்கு அழைக்க “சுதீஈஈஈப்” என்று உரத்த குரலில் சுனிதி அழைக்கிறார். 70 நாட்களில் அவர் 20 கிலோவுக்கு மேல் எடை குறைந்துவிட்டார். கன்னங்கள் ஒட்டிவிட்டன. முதல் மாதத்தில், சில நாட்களுக்கு ஒரு முறை மகனை அவருடைய தாய் எடை போட்டுப் பார்த்தார். ஒவ்வொரு கிலோ எடை கூடும் போதும் அவர் உற்சாகம் அடைந்தார்.
கையில் சிவப்பு மற்றும் தங்கத்தால் ஆன திருமண வளையல்கள் குலுங்க, தன் மாமியாருக்கு சாப்பாட்டு தட்டை தள்ளி வைக்கிறார் பாக்யஸ்ரீ. “அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது” என்று அவர் கூறினார். “அப்போது தான் தொடங்கினோம். அவர் இல்லாமல் நான் எப்படி வாழ முடியும்? கடவுளை நான் நம்பினேன் – அவர் திரும்பி வருவார். அவர் வந்தாக வேண்டும் என்று நம்பினேன்” என்று அவர் கூறினார்.
அவர்களுக்கு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அந்தத் தம்பதிக்கு மாடியில் தனியாக அறை உள்ளது. ஆனால் தினமும் மாலையில், குடும்பமாக அவர்கள் நான்கு பேரும் தரைதளத்தில் சிறிய முன் அறையில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். சுதீப்பின் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்ட ஸ்வப்னா அன்று மாலை வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, 1960களில் பிரபலமாக இருந்த பாலிவுட் காதல் பாடல்களை அவர் பாடினார்.
நெருக்கமான சமுதாய, குடும்ப உறவுகளுக்கு மத்தியில் சுதீப் நிதானமாகிவிட்டார். உள்ளூரில் கடல்சார் கல்லூரியில் அவர் வேலைபார்க்கிறார். கடல் பயணத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி அவர் கற்பிக்கிறார். தனது சொந்த அனுபவங்களை அவர் விவரிக்கிறார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் மாதக் கணக்கில் கொள்ளையர்களுடன் இருந்ததில் என்ன உணர்வு ஏற்பட்டது என சொல்வது கடினமாக உள்ளது. அதுபற்றி அரிதாகத்தான் பேசுகிறார்கள்.
“அந்த கொடூர நினைவுகள் இன்னும் இருக்கின்றன” என்று புவனேஸ்வரில் காரில் சென்றபோது அவர் என்னிடம் கூறினார். “ஆனால் அது பரவாயில்லை. எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. என் நண்பர்களும், குடும்பத்தினரும் என்னுடன் உள்ளனர். நான் கடல் பயணம் சென்றால், அப்போது அது மீண்டும் என் நினைவுக்கு வரும்” என்று அவர் குறிப்பிட்டார்.
துயரம் முடிந்துவிட்டது. சுதீப் மற்றும் வேறு சிலருக்கு நிர்வாகத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நடந்த விஷயங்களுக்கு யார் பொறுப்பேற்பது என்ற சிக்கல். திரும்பி வந்ததில் இருந்து, அவர்களுக்கான சம்பளமோ, அல்லது நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை. கப்பல் பணியிலும், கடத்தப்பட்டும் இருந்த ஏழு மாதத்துக்கும் மேலான நாட்களுக்கு தனக்கு 10 ஆயிரம் டாலர்கள் சம்பள பாக்கி வர வேண்டியுள்ளதாக சுதீப் கூறுகிறார். கடத்தல் சம்பவம் குறித்தோ அல்லது சுதீப்புக்கான சம்பள நிலுவை குறித்தோ எந்தக் கேள்விகளுக்கும் கேப்டன் கிறிஸ்டோஸ் விரிவான பதில்கள் அளிக்கவில்லை.
“கடத்தப்பட்ட அனைவரும் உரிமையாளரால் மீட்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்கும் சென்றுவிட்டனர்” என்று இமெயிலில் அவர் கூறியுள்ளார். சட்டவிரோதமாக எண்ணெயை அப்பெக்கஸ் வாங்கியது என்பதை அவர் தொடர்ந்து மறுக்கிறார். போன்னி தீவில் பழுதுபார்த்தல் மற்றும் சில பொருட்களை ஏற்றுவதற்குதான் கப்பல் சென்றது என்று அவர் கூறுகிறார். அந்த வழக்கு நைஜீரியாவில் நிலுவையில் உள்ளது.
கடல் பயணத்தில் என்ன மாதிரியான ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதை சுதீப்புக்கு நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. ஒழுங்குமுறை விதிகளும், பாதுகாப்பு விதிகளும் எழுத்தளவில் இருக்கின்றன, ஆனால் அமல்படுத்துவது சிரமம் என இதன் மூலம் தெரிகிறது. உலக வர்த்தகத்தில் கடல் பயணக் குழுவினர் முன்களத்தில் இருக்கிறார்கள்.
நைஜீரியாவில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் செல்கின்றன. சுதீப் போன்ற பலருடைய கதைகள், கினியா வளைகுடா பகுதியில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவுவதைக் காட்டுகிறது. சோமாலியாவைப் போல அல்லாமல், ஆப்பிரிக்காவில் பெரிய பொருளாதாரமாக இருக்கும் நைஜீரியா தங்கள் கடல் பகுதியில் சர்வதேச கடற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லை.

சுதீப் விடுதலையாகி வந்துவிட்டார். ஆனால் அவர் மற்றொரு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடைசி வரை இதை விட மாட்டேன் என்கிறார் அவர். “இதையே நான் சந்தித்துவிட்டேன். என் வாழ்வில் எதையும் சமாளிப்பேன்” என்று மற்றொரு நாள் இரவுப் பயணத்தின் போது அவர் கூறினார். “மனதளவில் யாரும் என்னை தாக்கிவிட முடியாது. ஏனெனில் எனக்கு இது இரண்டாவது பிறவி. நான் இன்னொரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் அப்படி நினைக்கிறீர்களா என்று நான் கேட்டேன். “அது ஒரு உணர்வு அல்ல – இது என் இரண்டாவது வாழ்க்கை தான்” என்று அவர் பதில் அளித்தார். அவருடைய வீட்டுக்கு வெளியே காரை நிறுத்தினோம். இரவு மணி 11. அப்போதும் உள்ளே மின்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பாக்யஸ்ரீ மற்றும் சுதீப்பின் பெற்றோர் காத்துக் கொண்டிருந்தனர்.
BBC